Tuesday 13 November 2012

சாதி அடையாளம் தேவையா?

வழக்கமாக என்னை இணையத்தில் தொடர்புகொள்ளும் சொந்தங்கள், நாம் நம்மை சாதியால் அடையாளப்படுத்திக் கொள்வது சரியா அண்ணா, இது மற்றவர்களை புண்படுத்தாதா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம், ஒரு தலித் தன்னை தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு இஸ்லாமியர் தன்னை இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு கிறிஸ்தவர் தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது யாரையும் புண்படுத்தாதா என்று கேட்கிறேன். அதன் பின் ஆம் என்று ஒப்புக்கொள்கின்றனர். இதனைக் கொஞ்சம் ஆராய்வோம்.
முத்துராமலிங்கத் தேவருக்குப் பின் ஒரு வலிமையான தலைவர் இல்லாத காரணத்தால் நம் சமுதாய மக்கள் திராவிடக் கட்சிகளில் சேர ஆரம்பித்தனர். அவர்கள் திராவிடர்களின் பேச்சைக் கேட்டனர். அவர்கள் சொல்வதே உண்மை என்று நம்ப ஆரம்பித்தனர்.
ராமசாமி நாயக்கரின் கொள்கையின்படி சாதியை ஒழிக்க வேண்டும், அதுவே தமிழரின் விடுதலைக்கு பயன்படும் என்று சொன்னார். இவருக்கு எப்போது இந்த ஞானோதயம் பிறந்தது? காசியில் பிராமணர்கள் சாப்பாடு தராத காரணத்தால் எச்சில் இலைகளை பொறுக்கிச் சாப்பிட நேர்ந்தபோது இந்த ஞானோதயம் பிறந்தது. அதன் பின் அவர் பிராமணர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கினார்.


அவர் சாதிக் கட்டமைப்பை பிராமணர்கள் உருவாக்கியதாவும், இந்து மதம் அதை வளர்த்து வருவதாகவும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இந்த பிரச்சாரத்தில் வந்தவர்கள்தான் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோர். எனவே சாதியை அடையாளப்படுத்திக் கொள்வது அநாகரீகமான செயல் என்று போதிக்கப்பட்டது. இதை இன்று நம் சமுதாயத்தைச் சேர்ந்த படித்தவர்கள் மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சாதி மக்களும் நம்புகின்றனர்.
ஆனால் உண்மையில் இது பொய்யான நிலை ஆகும். மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தால்தான் ராமசாமி நாயக்கரால் தேர்தல் அரசியலுக்கு வர முடியவில்லை. ஆனால் அவரது சிஷ்யர்கள் தேர்தல் அரசியலுக்கு வந்தனர். அவர்களுக்கு நன்றாகத் தெரியும் சாதி – மதம் பற்றி பேசினால் நமக்கு வாக்கு விழாது என்று. எனவே அவர்கள் ராமசாமி நாயக்கரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டனர். மேடை நாகரீகத்திற்காக மட்டும் அதைப் பேசிக் கொண்டனர். ஆனால் உண்மையில் சாதியை வைத்தே அரசியல் செய்ய ஆரம்பித்தனர்.
இதில் அவர்களுக்கு ஜால்ராப் போடும் போலிச் சாதித் தலைவர்களே பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால்தான் தமிழரின் உரிமைகள் அனைத்து முனைகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படும்போது வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டது.
உண்மையில் பண்டையத் தமிழகத்தில் சாதி வேறுபாடு இருந்தாலும் அனைத்துச் சாதியினரும் மற்றவர்கள் என்ன சாதி என்று அறிந்தே பழகி வந்தனர். இதுவே நமது வரலாறு காட்டும் உண்மை. ஆனால் இந்த போலித் திராவிட அரசியல்வாதிகள் காரணமாக தமிழன் சாதியை விட்டதாக நடித்துக் கொண்டு உண்மையில் சாதியை விடமுடியாத நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்து வருகிறான்.
சாதியை மறைப்பது நாகரீகம் என்று கருத ஆரம்பித்த காரணத்தால்தான் தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் ஆட்சிக்கு வர முடிந்தது. இதே நிலை தொடர்ந்தால் ஒரு ரெட்டியாரோ, ஒரு மார்வாடியோ ஆட்சிக்கு வரலாம். சாதிப்பெயரை மறைக்கச் சொல்லும் இவர்கள் மதப் பெயரை கண்டுகொள்வதில்லை. அதாவது சாதிப் பெயர் பிரிவினையை ஏற்படுத்துமாம். மதம் அப்படிச் செய்யாதாம். என்னே ஏமாற்று வேலை?
தமிழகத்தில் மட்டுமே இந்த போலி நிலையை பார்க்க முடிகிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ளவர்கள் மற்றவர்கள் என்ன சாதி என்று அறிந்தே பழகுகிறார்கள். அவ்வளவு ஏன் இந்த நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் கூட தன் பெயருடன் சாதிப் பெயரை சேர்த்து எழுதி வருகிறார்கள். அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாம் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று பொய்யான பாடம் நமக்கு புகட்டப்பட்டுள்ளது.  எனவே அதை நாம் கண்டுக் கொள்ளத் தேவையில்லை.
சாதி ஒழிப்பு என்பது சாத்தியமில்லாதது. அதுவும் இந்தியா முழுவதும் சாதி இருக்கும்போது தமிழ்நாடு என்ற ஒரு மாநிலத்தில் மட்டும் சாதியை ஒழிக்க முடியவே முடியாது. தமிழகத்திலும் கூட எந்த சாதியும் தங்கள் சாதியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இதில் முதல் வரிசையில் நிற்பவர்கள் தலித்கள் ஆவர். தங்களை முற்போக்குவாதிகள் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் இவர்கள் உண்மையில் தங்கள் சாதியை ஒழிக்கத் தயாராக இல்லை. மற்றவர்களின் சாதியை மட்டுமே ஒழிக்கச் சொல்கிறார்கள்.
எனவே இந்த பொய்யான சாதி ஒழிப்பு நாகரீகத்தை நம் சமுதாயத்தைச் சேர்ந்த படித்தவர்கள் பின்பற்றக் கூடாது. தைரியமாக நான் கள்ளர், மறவர், அகமுடையார் என்று சொல்ல வேண்டும். அது அநாகரீகம் அல்ல.
அனைத்து சலுகைகளுக்கும் சாதியைப் பயன்படுத்திக்கொண்டு மேடையில் சாதியை ஒளித்து வைத்துக்கொள் என்று பேசுபவர்களின் பின்னால் நாம் போகத் தேவையில்லை. அதனால் நமக்கும் நம் சந்ததிக்கும் நன்மை இல்லை. எனவே சாதிப்பெயரை தைரியமாக பயன்படுத்துங்கள். சாதிகளை அறிந்தே நாம் நட்புகொள்ள முடியும். அவ்வாறே நாம் எல்லா மக்களுடனும் பழகுவோம்.

5 comments: