
கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்னை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே கூறுபோட்டு சாய்க்கும் அவலம்.
மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய முடியாத நிலை. மதத்தின் பெயரால் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள். அதில் பலியாகும் ஏராளமான உயிர்கள்.
ஏன் இந்த நிலை?
இருநூறாண்டுகளுக்கு முன்பே, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் இரு குறுநில மன்னர்கள். கி.பி. 1780-1801 (சுமார் 20 ஆண்டுகள்) காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது சகோதரர்களின் ஆட்சி வரலாற்றில் தடம் பதித்துள்ளது.
இம் மன்னர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பும் உண்டு.
சுதந்திர இந்தியாவை ஏற்படுத்துவதற்காக அன்னியர்களை அப்புறப்படுத்த, அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மகா வீரர்கள் அவர்கள்.
அவர்களது ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டன. மத வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தை அவர்கள் வளர்த்ததற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும் கட்டி உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயம், குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி ஆட்சி புரிந்தனர்.
மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கமே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவை அவர்களுக்குத் தந்தது.
சின்ன மருதும், பெரிய மருதும் தங்களது படை வலிமையினாலும், தந்திரத்தாலும், வீரத்தினாலும் கும்பினிப் படைகளை கதிகலங்கி ஓடச் செய்தனர்.
பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சத்திரியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகியோரை இணைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தனர்.
கன்னடத்தைச் சேர்ந்த நேதாஜி வாக், மலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னடத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த கான்-இ-கான், திண்டுக்கல் கோபால் நாயக்கர் போன்ற புரட்சியாளர்களை ஓரணியில் சேர்த்து, வெள்ளையரை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று எழுதிக் கையொப்பமிட்டு, திருச்சி கோட்டை வாசலில் அதை ஒட்டி
னர்.
இதைப் படிப்பவர்கள், ஏராளமான பிரதிகள் எடுத்து இச் செய்தியை எங்கும் பரவிடச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள், காராம் பசுவைக் கொன்றதற்குச் சமமாகக் கருதப்படுவர் எனப் பிரகடனப்படுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களது சூழ்ச்சியால் மாமன்னர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.
கர்னல் அக்னியூ தலைமையில், 1801, அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
திருப்பத்தூரில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.
அங்கே, அவர்களது முழு உருவச் சிலைகள் எழுப்பப்பட்டு, வெள்ளையனுக்கு எதிராக முதலில் வாள் சுழற்றியதற்கு மெüன சாட்சியாக அவை நிற்கின்றன.
மத நல்லிணக்கம் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது, அறிவியல் வளர்ச்சிபெறாத காலத்திலேயே மருது சகோதரர்களின் எண்ணத்தில் உதித்தது மனிதம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.
…
No comments:
Post a Comment