Saturday 15 March 2014

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர்

 
 



அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர்

மரம்: மூங்கில்
குளம்: பெண்ணையாறு

பதிகம்: பித்தாபிறை -7 -1 சுந்தரர்

முகவரி: திருவெண்ணெய்நல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 607203
தொபே. 04153 234548

இவ்வூரிலுள்ள கோயிலுக்குத் திருவருட்டுறை என்று பெயர். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர் வண்டி நிலையத்துக்கு ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இது பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. இம் மெய்கண்ட தேவருக்கு அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். இறைவர்: தடுத்தாட்கொண்டநாதர், இறைவி: வேற்கண்ணிநாயகி. மங்களாம்பிகை. தீர்த்தம்: பெண்ணையாறு.



கல்வெட்டு:


( A.R.E. 1902 - No. 309 - 319; A.R.E. 1921 -420 - 483, S.I.I.Vol. VII No. 938 - 948; S.I.I.Vol.XII The Pallavas.)

திருவெண்ணெய் நல்லூர்த் தடுத்தாட் கொண்ட தேவரது திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராசராச உடையார், கோப்பரகேசரி பன்மரான உடையார் இராசேந்திரதேவன், இரண்டாங் குலோத்துங்கஉடையார், இரண்டாம் இராசாதிராசஉடையார், மூன்றாங் குலோத்துங்கஉடையார், மூன்றாம் இராசராசன் உடையார், மூன்றாம் இராசேந்திரஉடையார் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், விக்கிரம பாண்டிய உடையான் இவர்கள் காலங்களிலும்; பல்லவமன்னர்களில் முதலாம் கோப்பெருஞ் சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் மகாமண்டலேஸ்வரன் வீரபூபதி உடையார், விஜயமகாராயர், விரூபாட்சுமகாராயஉடையார், குமாரமல்லி கார்ச்சுனராயஉடையார், கிருஷ்ணதேவராய உடையார் இவர்கள் காலங்களிலும், சாளுவமன்னர்களில் மகாமண்டலேஸ்வரன் நரசிங்கதேவமகாராயர் காலங்களிலும், காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இறைவர்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், முதலாம் இராசராச உடையார் கல்வெட்டில், திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் முதலானோர் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும், தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் அழைக்கப் பெறுகின்றனர்.

குறிக்கப்படும் திருமேனிகளுள் சில: திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பள்ளியறை நாச்சியார், வாணலிங்க தேவர் இவர்களும், திரிபுவனச் சக்கரவர்த்தி உடையார் இராஜராஜ தேவரின் கல்வெட்டில் க்ஷேத்திரபாலப் பிள்ளையாரும், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கஉடையார் கல்வெட்டில் திருக்காமக்கோட்டம் மேலைமூலையில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரும் குறிக்கப்படுகின்றனர். இப்பிள்ளையாரின் முழுப்பெயரும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துகள் சிதைந்து விட்டபடியால் `தில்லைவ ....... நன் பிள்ளையார்` என்பது மாத்திரம் கிடைக்கின்றது.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி: `பூமருவிய திசைமுகத் தோன் படைத்த பெரும்புவி விளங்க` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய மூன்றாங் குலோத்துங்கசோழ உடையார் காலத்தில், கூடல் ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள் வாள்நிலை கண்டானான காடவராயன் ஒரு திருமேனியை இக்கோயிலில் எழுந்தருளி வித்துள்ளான். கல்வெட்டில் அப்பெயர் சிதைந்து விட்டது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றிய செய்திகள்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவர் நாச்சி மாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும். இச்செய்திகள் `பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம் முன் செய் தவத்தால் பருதிவழித்தோன்றி` என்று தொடங்கப்பெறும் மெய்க்கீர்த்தியையுடைய உடையார் இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும், ஒரு சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு, தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வூரில் வழக்குவென்ற திருவம் பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவரின் 29 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக் கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

திருச்சின்னத்துக்குப் `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இறைவர், சுந்தர மூர்த்தி சுவாமியை நோக்கி `நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக` என்றார். அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லிப்பாடுகேன்` என்றார். அதற்கு இறைவர் `முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை, ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார். அப்பொழுது சுந்தரமூத்தி சுவாமிகள் `பித்தாபிறைசூடீ` எனப் பெரிதாந் திருப்பதிகம் பாடினார் எனச் சேக்கிழார் பெருந்தகையார் கூறிய வரலாற்றை உறுதிப் படுத்துகின்றது `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்ற கல்வெட்டுத் தொடர். (பித்தன் - பிச்சன், தகரத்துக்குச் சகரம் போலி)

அக்கல்வெட்டு பின்வருமாறு: `ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27) ஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான் உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன் என்று பாடச் சொன்னான் திருச்சின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து சாத்தின கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு. இது பன்மாஹேஸ்வர ரகை்ஷ` (S.I.I. Vol XII The Pallavas No. 231.)

குறிப்பு: இக் கல்வெட்டு இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார் காலத்தில் பொறிக்கப்பட்டது. இக் கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1268 மார்ச்சு 28 ஆம் தேதியாகும். 

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விடப்பட்ட நில நிவந்தம்.
நாச்சிமாரோடு பூசை கொண்டருளுகிற ஆளுடைய நம்பிக்கு அமுதுபடி உள்ளிட்ட நிவந்தங்களுக்கு உடலாக (மூலதனமாக) திரு வெண்ணெய்நல்லூர்ச் சபையார், திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பட்டர்கள், ஆதனூர் எல்லையில் அதிராதீர காடகையாஜியார், ஆட் கொண்ட தேவற்குச் சட்டிவிளாகமாகக்கொண்டு விட்ட நிலத்துக்கு வடக்கே, அரைவேலி நிலத்தைக்கொடுத்துள்ளனர். இது நிகழ்ந்தது இரண்டாம் குலோத்துங்கசோழ தேவரின் காலமாகும் (கி.பி.1148). இதே ஆண்டில் களத்தூர் சிறிய நம்பி சகஸ்ரன். ஆளுடையநம்பிக்கு அடைக்காய் அமுது` இலையமுது இவைகளுக்கு, திருவெண்ணெய் நல்லூரில் ஸ்ரீவானவன் மாதேவிவதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு இதற்குட்பட்ட தோட்டநிலத்தைக் கொடுத்துள்ளான். ஆட்கொண்டதேவர் கோயிலிலே மாடாபத்தியஞ்செய்த உடையார் அகமுடையாள் பொன்னாண்டாள், ஆளுடைய நம்பிக்கு அமுது படிக்கும், திருக்கைகொட்டிப்புறத்துக்கும் ஆக, திருவெண்ணெய் நல்லூரில் வானவன்வதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு நிலம் ஒன்றே அரைமா அரைக்காணிக் கீழரையைவிற்று, விற்ற காசை ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கினாள். (மாடாபத்தியம் கோயில் விசாரணை. திருக்கைகொட்டிப்புறம் - திருமுறை ஒதுதற்குரிய கோயில் மண்டபத்துக்கு விட்டநிவந்தம். புறம் - நிவந்தம்.)

திருவருட்டுறை உடைய மகாதேவர்க்கு அளிக்கப்பட்ட நிவந்தம்: அருட்டுறை உடைய மகாதேவர் கோயில்  அகமுடையார்மகன் திருமலை அழகியானான வீரகள், வீரப் பல்லவரைய உடையான் அருட்டுறை உடைய மகாதேவர்க்கு, தூபமணி, தூபம், துடர், திருவாராத்தித்தட்டம் இவைகளைக் கொடுத்துள்ளான். இவனுக்கு ஏமப்பேறூரில் பெண்ணையாற்றுக்குத் தெற்கே புன்செய் நிலம் 3500 குழியும் இவன் தம்பிக்குத் திருவெண்ணெய்நல்லூரில் 1250 குழியும் ஆக 4750 குழிகள் அல்லது முப்பதுமா வரை நிலங்கள் இருந்தன. இத்திருமலை அழகியான் இறக்கும் பொழுது தன்னுடைய இந்தநிலத்தை உடையார் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் முதலிகளில் இராசராச தேனம்மையனுக்குத் திருக்கை வழக்கமாக வழங்கினான். அந்நிலத்தை இந்த முதலி, கோயில் மண்டபத்தில் பதினாலும், திருக்காமக்கோட்டத்தில் மூன்றும், திருநடைமாளிகையில் மேல் எல்லையில் அழகிய நாயனார் இருக்கும் இடத்தில் ஒன்றுமாக நாடோறும் பதினெட்டு, சந்தி விளக்குகள் எரிப்பதற்குக் கொடுத்துள்ளான்.

பொதுச் செய்திகள்: இவ்வூரில் இராஜராஜப்பேரேரி ஒன்று உள்ளதை, கோப்பரகேசரி இராசேந்திரசோழதேவரின் ஆறாம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே இந்த ஏரி மிகப் பழமையானதாகும்.

ஆட்கொண்டதேவர் கோயிலுக்குத் தென்பாலுள்ள குளம் கி.பி.1396 இல் விரூபாக்ஷுவின் அமைச்சர் நஞ்சண்ணாவின் தமையனார் விருப்பண்ணாவால் பழுதுபார்க்கப்பட்டது, 

விசயநகர வேந்தராகிய கிருஷ்ணதேவரா உடையார் தம்பேரால் தடுத்தாட்கொண்ட தம்பிரானார் திருக்கோயிலிலும், வைகுந்தப்பெருமாள் திருக்கோயிலிலும், கிருஷ்ணதேவராய உடையார் சந்தி நடத்துவதற்குச் சர்வமான்ய மாக நன்செய் நிலம் 35 மாவும், புன்செய் நிலம் 20 மாவும் கொடுத்துள்ளார்.

இக்கோயிலிலுள்ள கோபுரத்து வாசலின் முகப்பு குலோத்துங்க சோழதேவரின் மூன்றாம் ஆண்டில், கூடல் மோகன் ஆளப்பிறந்தான் நாராயணனாகிய காடவராயனால் கட்டப் பட்டதாகும். இக்கோபுரத்தில் திருவெண்ணெய்நல்லூர் இறைவரின் புகழைப்பற்றி ஐந்து தமிழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் உள்சுவரில் சகம் 1108 அதாவது கி.பி. 1186 இல் சில பாடல்கள் அரசுநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அவை காடவராயர் குடும்பத்தைப் பற்றிய செய்திகளாகும். இக் கோயிலில் ஆட்கொண்ட தேவர் பாலாடியருள பசுக்கள் விடப்பட்டிருந்தன. பசுக்களை விட்டவர் ரிஷபம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்பசுக்கள் சுரபி மன்றாடிகளிடம் விடப்பட்டிருந்தன. அவர்கள் அப்பாலை அருமொழிதேவன் நாழியால் தவறாது அளந்து வந்தனர், 
[சுரபி மன்றாடிகள் - பசுக்களைப் பாதுகாக்கும் இடையர்.]

இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார், ஆனைக்கு அரசு வழங்கும் பெருமாள்தோப்பு என்னும் தோப்பைத் திருக்கோயிலுக்கு விட்டிருந்தான். அது 12 மா நிலப்பரப்புள்ளது. மேலும் இவன் சீழகம் பட்டில் கோப்பெருஞ்சிங்கன் தோப்பு என்னும் பெயருள்ள தோப்பு ஒன்றையும் விட்டிருந்தான். சோழமண்டலத்தில் விக்கிரம சோழவள நாட்டில் திருப்பழனம், வடகுரங்காடுதுறை முதலான ஊர்கள் விறைக் கூற்றத்தைச் சேர்ந்தன. விறைக்கூற்றம் என்பது விறை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டது.

அந்த விறை என்னும் ஊர்க்கு அகளங்கபுரம் என்னும் வேறு பெயர் உண்டென்பதை இக் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது. அவ்வூரில் உள்ள ஒருவன் தடுத்தாட்கொண்ட தேவர்க்கு விளக்குக்கும் விழாவிற்கும் 120 காசு கொடுத்துள்ளான்.

பட்டுடையான்: `இந்நாளில் இப்படி செலுத்துவேனாய் இப் பொன்கொண்டேன், இத் தளிப்பட்டுடையான் ஈஸ்வரக்காணி வாம தேவன் திருவெண்காடனேன்`(S.I.I. Vol. III. Part III No. 94. p. 227. ) என்னும் கல்வெட்டுப்பகுதியில் பட்டுடையான் என்ற தொடர் வந்துள்ளது, இந்த ஆட்கொண்ட தேவர் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில்கண்ட ``ஆட்கொண்டதேவர்  சைவா சாரியஞ் செய்து வருகிற பட்டுடையார்களைத் தவிர``, என்னும் (S.I. Vol. VII No.944.)கல்வெட்டுப்பகுதியால் பட்டுடையார் என்பது சைவா சாரியம் மட்டும் செய்வாரைக் குறிக்கும் என்பது தெற்றெனப் பெறப்படுகின்றது. எனவே பட்டுடையார் என்பது கோயிற்பூசை செய்வாரைக் குறிக்காது.

``இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ளடு`` முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர், திருவெண்ணெய்நல்லூர் என்றும், கோப்பரகேசரிபன்மரான உடையார் இராஜேந்திரதேவர் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் காலம்முதல் பின்னுள்ளோர்காலம்வரை இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது.